October 29, 1931 - July 18, 2013 |
கண்ணீரால் உன்னுடல் கழுவிப் பாதம் தொழுததாம்!
உன் கவிதைகளைப் படித்துப் படித்தே கவிஞர் ஆனவர் பலர்.
கவியில்லையென்றாலும் உன் சேவடிக்கு இது நான் சேர்க்கும் மலர்!
என் மானசீக குரு நீ! நான் பார்த்திராத
தமிழ்த் தாத்தா உரு நீ!
நான் இன்று எழுதுவதும் படிப்பதும்
நீ முன்பு பற்றவைத்த தீ!
வாலியின் முன்னில் பலம் இழந்தவர்கள் உண்டு.
அது த்ரேதா யுகத்தில்.
வாலியின் பண்ணால் பலம் கொண்டவர் மட்டுமே உண்டு.
இந்தக் க(லை)லி யு(ல)கத்தில்.
உனக்கு அலாதி ப்ரியம், ராமச்சந்திரன் பேரில்.
அவர் பவனி பல வந்ததுண்டு உன் கவிதைத் தேரில்.
சில நாள் அரிதார புருஷனாய்!
சில நாள் அவதார புருஷனாய்!
ஒருவன் புரட்சித் தலைவன்
இன்னொருவன் காவியத் தலைவன்.
முன்னவருக்கு கிடைத்ததோ முதல்வர் அரியணை!
பின்னவன் கொடுப்பான் உன் ஆன்மாவுக்குத் தலையணை!
நீ தாய்க்கும் பாடினாய், சேய்க்கும் பாடினாய்.
காமத்தையும் பாடினாய், ராம நாமத்தையும் பாடினாய்.
உனக்கு தத்துவமும் அத்துப்படி
'குத்து'வமும் அத்துப்படி!
காலனொடு 'முக்காபுலா' போடும் காலத்திலும்
'சுவாசம் ரொம்ப மோசம்' என்று எதுகை மோனை!
விடுவானா காலன்! கேட்டதும் அள்ளிக் கொண்டு போய் விட்டான்
எங்கள் தெள்ளுதமிழ்த் தேனை!
அள்ள அள்ளக் குறையாத
நீயோ அட்சயப் பானை.
உன் வெண்தாடி விழுதில் ஏறி விளையாடும்
நாங்கள் வெறும் வானர சேனை.
சேட்டை மட்டுமே நாங்கள் அறிவோம்.
ஏட்டைக் காட்டி பாட்டைக் கேட்டல்
கோட்டையில் அமர வைக்கும் - ராஜ
பாட்டை உன்னால் மட்டுமே சாத்தியம்!
திருவரங்கத்துக் கவியரங்கமே!
தெவிட்டாத தமிழ்ச்சுரங்கமே!
நீ விட்டுப்போன சிம்மாசனம்
இனி நிரந்தரமாய் காலி.
நீ தொட்டுப் போன உயரங்கள்
என்றென்றும் சொல்லும் - வாலி! வாலி! வாலி!
வணக்கத்துடன்,
ப்ரவீன்.
No comments:
Post a Comment