21 August 2012

மன்னிப்பாயா?

என்னை மன்னிப்பாயா?
கொஞ்சம் கடினம் தான்!
என்னவெல்லாம் செய்திருக்கிறாய் எனக்காக!
உன்னைப் போய் காயப் படுத்திவிட்டேனே!

உன் மீது நான் சாய, 
என் கன்னம் நீ தீண்ட
எத்துணை இரவுகள், 
எத்துணைப் பொழுதுகள்!

நான் முதலில் காதல் சொன்னது உன்னிடம் இல்லை.
பின்னாளில் சொன்னது உனக்கானதும் இல்லை.
என்றாலும், என்னைப் புரிந்து கொண்டு
எனக்காய் எத்துணைக் காதல் தூது சென்றிருப்பாய்!

என் காதலுக்கு நீ தானே சாட்சி!
நான் முதன் முதலில் என்னவளிடம் பேசியதை
உடனிருந்து கேட்ட ஒரே ஜீவன், 
நீ அல்லவா!

நீ எனக்காய் கற்றுக் கொண்டு பாடிய 
எத்தனையோ பாடல்களில்- நான் 
கண் அயர்ந்திருக்கிறேன், 
புண் ஆற்றி இருக்கிறேன்!

வழி தவறிப் போய் தவித்த போதெல்லாம்
எனக்கு சளைக்காமல் வழி காட்டினாயே!
உன்னிடத்தில் நான் எத்தனையோ சொல்லி இருக்கிறேன்
ஒரு முறை கூட நீ சலித்துக்கொண்டதில்லையே!

எத்தனை நாட்கள் நீ எனக்காய் ஒய்விழந்திருக்கிறாய்!
உன் நலம் பொருட்படுத்தாது, கொதிக்கும் காய்ச்சலிலும்
எத்துணை முறை எனக்காய் அலைந்திருக்கிறாய்..
பின் அணைந்தும் இருக்கிறாய்!

என் கண்ணே! இன்று உனக்கு பக்கவாதம்!
தொட்டால் உணர்ச்சியற்று கிடக்கிறாய்!
உன்னுள் உயிர் இருப்பது தெரிகிறது!
என் உயிர் மட்டும் வலிக்கிறது!

நான் இத்துணை கொடுமை செய்தும்
நான் சொன்னதெல்லாம்,
எனக்காய் சேர்த்துத் தான் வைத்திருக்கிறாய்!
உனக்குள் கோர்த்துத் தான் வைத்திருக்கிறாய்!

கல் நெஞ்சன் நான்!
இன்று கண்ணீர் வடிக்கிறேன்.
உன்னைக் காயப் படுத்திய என் கையின்
நகக் கண்ணிலும் சேர்த்துத்தான்!

என்னை மன்னிப்பாயா?
நான் கோபத்தில் காயப் படுத்திய என் இனிய கைப்பேசியே!
காயப் படுத்திய வருத்ததுடன், 
உன் அருமையை உணர்ந்த,

நான்!


My ode to my Nokia 5230, whose touch screen display is damaged due to a single moment of madness from yours truly.. :)