சமீபத்தில் ஊத்துக்காடு ஸ்ரீ வேங்கட கவியின் சில பாடல்களை படித்து ரசிக்கும் வாய்ப்பு கிட்டியது. பள்ளிப் பிராயத்தில், பம்பாய் சகோதரிகள், திருமதி. சரோஜா மற்றும் திருமதி. லலிதா பாடி வெளியிட்ட ஒரு ஒலிப்பேழையை அதன் நாடா அறுந்து விழும் வரை கேட்டிருக்கிறோம். அதில் என்னை மிகவும் ஈர்த்த ஒரு பாடல் "மதனாங்க மோகன சுகுமாரனே" என்று தொடங்கும் 'கமாஸ்' ராகப் பாடல்.
இவரைப் பற்றி பல்வேறு இணையதளங்களில் உள்ள செய்திகளை படிக்கும் பொழுது, இவர் வாழ்ந்த காலம் குறித்த சரியான கணிப்பு இன்னும் செய்யப்படவில்லை என்பதும், இவர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கப் பெறவில்லை என்பதும் தெரிய வருகிறது.
இசையன்பர்கள் எல்லோருக்கும் பரிச்சயமான 'அலைபாயுதே கண்ணா' இவர் இயற்றிய பாடலே! இந்தப் பாடலை பலர் பலவிதமாய் நமக்கு அளித்திருந்தாலும் இசைஞானி இளையராஜாவின் இசையில் 'எத்தனை கோணம் எத்தனை பார்வை' என்ற (வெளிவராத) திரைப்படத்தில் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இருவரும் சேர்ந்து பாடிய பதிவு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
இவரது பாடல்களில் எந்த அளவு பக்தியும், பணிவும் இருக்கிறதோ, அதே அளவில் குறும்புத்தனமும், ஹாஸ்ய ரசமும் இருப்பதை காண முடிகிறது. மேற்ச்சொன்ன 'மதனாங்க மோகன சுகுமாரனே' பாடல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
'வனிதையர் உள்ளம் மகிழும் வாசுதேவனின்' நடனத்தை வியந்து ஒரு கோபிகை (அல்லது ஒரு பெண்) ரசிப்பதைப் போல அமைக்கப் பெற்றிருக்கும் இந்தப் பாடலில், அவன் ஆடலால் ஈர்க்கப்பெற்று "தகிட தீம் கிடதோம், தகிட ததீம் கிட தோம் என்று எத்தனை நேரம் நான் ஆடுவேன்?" என்று வினவுகிறாள் அந்த கோபிகை.
இப்படிப் பாடி வரும் அந்த பெண்ணின் மனநிலையை கவி எப்படி படம் பிடித்துக் காட்டுகிறார் பாருங்கள்.
"இங்கு நந்தகுமாரனின் கானத்திற்கு இசைந்த படியும் ஆடி வெச்சாச்சு,
அங்கு என் மாமியார், நாத்தனார் சொல்படி ஆட வேணும் இது பாடாய் போச்சு!" என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.
நான் படித்ததில் எனக்குப் பிடித்தது உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்....மீண்டும் சந்திப்போம்!
திருமதி அருணா சாய்ராமின் குரலில் இந்த பாடலை நீங்கள் இங்கே கேட்கலாம்.